Our Belief

கற்க அறக்கட்டளை :

உலகில் அறம் சார்ந்த ஓர் சமூகத்தைக் கட்டமைக்க வேண்டுமெனில் அதற்கான அஸ்திவாரமாக அமைவது கல்வியே. கல்வி என்பது, நமக்குள் அறிவு மற்றும் உணர்வு என்ற இரண்டையும் முழுமையாக மலரும் வகைசெய்வதாக இருக்க வேண்டும்.

“ எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு ”

-என்றார் திருவள்ளுவர்

எண் சார்ந்த அறிவை வளர்க்கும் கல்வி, மற்றும் எழுத்துச் சார்ந்த உணர்வை வளர்க்கும் கல்வி என இரண்டும் இப்பொருள் சார்ந்த உலகில் வாழும் நமக்கு இரண்டு கண்கள் போல என்கிறார். இரண்டில் ஒன்றில்லாமல் ஒன்று மட்டும் இருந்தால் நாம் குறை பார்வை கொண்டு வாழ்பவர் ஆவோம். அதனால் தடுமாறும் நிலைக்கு ஆளாவோம் என்கிறார்.

இரண்டில் எண் சார்ந்த கல்வி என்பது அறிவை மட்டும் வளர்க்கும். இதனால் சமூகத்தில் சுயநலம் பெருகி, ஒழுக்கம் குறைந்து அறம் சிதைந்து போகும். இன்றைய நிலை இது தான். மாறாக, எழுத்து சார்ந்த கல்வி என்பது உணர்வை மட்டும் வளர்க்கும். அதனால் சாதி மத பேதங்கள் அதிகரித்து, அறம் சிதைந்து விடும். சென்ற நூற்றாண்டில் இருந்த இந்த நிலையால் ஏற்பட்ட தீங்கையும் நாம் அறிவோம்.

இரண்டையும் நமக்குள் முழுமையாக வளர்க்கும் வகையில் அமைந்த கல்வித் திட்டமே நம்மை முழு வளர்ச்சி அடைந்த மனிதர்களாக உருவாக்கும்.

எனவே இன்றைய கல்வித் திட்டத்தின் ஊடாக அறிவை வளர்த்துக் கொள்ளும் அதே நேரத்தில், உணர்வை முழுமையாக வளர்க்கும் கல்வியையும் நாம் கற்பது மிக மிக அவசியம்.

புத்தி சார்ந்த கல்வியை வழங்க ஏராளமான தளங்கள் உள்ளன. ஆனால் உணர்வு சார்ந்த கல்வியை வழங்க நம்மிடம் அதிக தளங்கள் இல்லை. தமிழன்னை நம் அறிவு , உணர்வு என இரண்டையும் வளர்த்துக் கொள்ள எண்ணிலடங்கா நூல்களை கொடையாக அருள் செய்திருக்கின்றாள். அவற்றுள் தலையாய நூல் என்றால் அது தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய “ திருக்குறள் ” தான் என்பதில் இரண்டாவது கருத்திற்கே இடமில்லை.

எனவே அறவோர் ஒப்பற்ற இந்நூலை கற்று அது நல்கும் அறங்கள் ஊடாக அற உணர்வில் வளர்ந்து, சம நிலை பெற்று நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சமூக வேறுபாடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு இன்றைய பொருளுலகிலும் அறத்தின் மீது நாட்டமும், ஒழுக்கமும் உள்ள அனைவருக்கும் தன் அருளை வழங்கும் முகமாக திருவருள் “ கற்க அறக்கட்டளை ” என்ற ஒரு தளத்தை உருவாக்கியுள்ளது.

இதன் வழியாக “ உயர் வள்ளுவம் ” என்ற பெயரில் திருக்குறளையும் “ உயிர் நோக்கு ” என்ற பெயரில் சைவ சித்தாந்தத்தையும் தொடர் வகுப்புகளாக நடத்தி, இவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் இறை பணியைச் செய்கிறோம்.

தமிழுலகம் போற்றி வணங்கும் கம்பவாரிதி திரு. இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள், இதற்கு மூல காரணமாக திகழ்ந்து வழிகாட்டி எங்களை நடத்திச் செல்வதோடு, நமக்கு இவ்விரண்டு நூல்களையும், எளிமையாக உள்வாங்கும் விதமாக இவ்வகுப்புகளை பேரிடர் காலத்திற்கு முன் வரை நேரடி வகுப்புகளாகவும் பின்னர் இணைய வழியிலும் ( ஆன்லைனிலும் ) நடத்தி வருகிறார்.

இந்த வகுப்புகளில் சேர்ந்து பயில கட்டணம் ஏதுமில்லை. அனைத்து வகுப்புகளி்ன் பதிவுகளையும் எங்கள் www.karka.co.in என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்கிறோம். மேலும் ஏனைய சமூக ஊடகங்களான YouTube, Facebook என இவற்றிலும் இலவசமாக காணலாம்.

வகுப்புகளில் பங்கேற்க விரும்பினாலோ வகுப்புகளின் விவரங்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலோ நீங்கள் உங்கள் பெயரை வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள link குகளை கிளிக் செய்து உங்களுக்கு உகந்த சமூக ஊடகத்தின் வழியாக ஏதேனும் ஒன்றில் பதிவு செய்து கொள்ளலாம்.

இறையருளால் நிகழும் இந்த இறை பணியில் பங்கேற்று நீங்களும் பயனைடந்து உங்களால் உலகமும் பயனுற அன்போடு அழைக்கிறோம்.

அன்புடன்,
கற்க அறக்கட்டளை.

This trust was formed in 2016. If you are interested in joining hands in our efforts, please email us at trust@karka.co.in.